அகமதாபாத்:
பெங்களூரை சேர்ந்த ஜனாத்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களை சாமியார் நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார்.
ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்ட 2 மகள்களையும் மீட்டு தங்களிடம் ஒப்படைக்கக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக நித்யானந்தா தலைமறைவானார்.
இந்நிலையில், கடத்தி சிறை வைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் இருக்கிறோம். தேவைப்பட்டால் கோர்ட்டில் ஆஜராக தயாராக இருக்கிறோம் என கூறி இருந்தனர்.
இந்நிலையில் மகள்களை ஆஜர்படுத்த கோரிய ஜனார்த்தன சர்மாவின் ஆட்கொணர்வு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தாவை கண்டுபிடிக்க 'இன்டர்போல்' போலீஸ் உதவியையும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியையும் நாடுமாறு குஜராத் போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
காணாமல் போன 2 பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும், நித்யானந்தாவால் அந்த குடும்பத்திற்கு எந்தவித மிரட்டலும் வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
அந்த பெண்கள் தாங்களாகவே விரும்பி நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருக்க விரும்பினால் அவர்களின் உணர்வுக்கும், சுதந்திரமான முடிவுக்கும் மதிப்பளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது